பெங்களூரு மருத்துவமனையில் பெருகி வரும் இளம் இதய நோயாளிகள்

பெங்களூரு

பெங்களூருவில் உள்ள ஒர் உ மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 150 இளம் இதய நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதய நோயான மாரடைப்பு என்பது சாதாரணமாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் தற்போது மிகவும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.   அதுவும் 16 வயது முதல் 25 வயதான இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது  தெரிய வந்துள்ளது.

பெங்களூருவின் புகழ்பெற்ற மருத்துவமனையான ஸ்ரீ ஜெயதேவா இதயநோய் ஆராய்ச்சி மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ்மனைகளில் ஒன்றாகும்.  இங்கு ஒவ்வொரு மாதமும் 40 வயதுக்கு குறைவான சுமார் 150 இதய நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.   இவர்களில் சராசரியாக 8 பேர் 16 வயதில் இருந்து 25 வயதானவர்கள் ஆவார்கள்.

இந்த மருத்துவமனை நடத்திய ஆய்வில் கடந்த 2017 ஏப்ரல் முதல் 1864 இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   நேற்று மட்டும் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   நேற்று அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் மிகவும் வயது குறைந்தவர் 16 வயதான ஆந்திரப் பிரதேச வாலிபர் என்பது குறீபிடத்தக்கது.   இவர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.   இவர் மாரடைப்பை வாய்வுக் கோளாறு என நினைத்து சிகிச்சை பெற வந்தவர் ஆவார்.

இந்த மருத்துவமனையின் மருத்துவர் மஞ்சுநாத், “நிறைய பேர் மாரடைப்புக்கான எச்சரிக்கையை வாயுக் கோளாறு என தவறாக புரிந்துக்கொண்டு விடுகின்றனர்.   அத்துடன் இவ்வாறு இளைஞர்களுக்கு மாரடைப்பு வர முக்கிய காரணம் குடிப்பழக்கமும் புகைப்பழக்கும் தான்.   இவர்களில் பலருக்கு நீரழிவு, கொழுப்புச் சத்து அதிகரிப்பு ஆகியவை ஏற்படாமலே மாரடைப்பு உண்டாகிறது.

அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு வாகனப் புகை காரணமாகவும் இவ்வாறு மாரடைப்பு உண்டாகிறது.    மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 25% டாக்சி ஓட்டுனர்கள் என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இதை தடுக்க ஒரே வழி புகைப்பழக்கத்தையும் குடிப்பழக்கத்தையும் உடனடியாக அடியோடு நிறுத்துவது மட்டுமே ஆகும்.   அத்துடன் தேவையற்ற மன உளைச்சலும் ஒரு காரணம் ஆகும்.   வேலைப்பளு காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது.   இவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவது மிகவும் குறையும் ” என தெரிவித்துள்ளார்.