கர்நாடக காங்கிரசில் விசுவாசிகளும் வெளி மனிதர்களும் : சூடான விவாதம்

--

பெங்களூரு

நேற்று நடந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் அரசு கலைப்பு குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி உறுப்பினர் 13 பேர் மற்றும் மஜதவை சேர்ந்த 3 அதிருப்தி உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.  இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து நம்பிக்கை வாக்கு கோரியது.   நம்பிக்கை வாக்கில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

இந்த ஆட்சி கவிழ்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று ஒரு கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.  இந்த கூட்டத்தில் பல உறுப்பினர்கள் அரசின் கவிழ்ப்புக்கு அதிருப்தி உறுப்பினர்களே காரணம் எனக் கூற்றம் சாட்டி உள்ளனர்.   இந்த சூடான விவாதத்தில் இந்த அதிருப்தி உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா, பரமேஸ்வரா, டி கே சிவகுமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.    ஏற்கனவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் டி கே சிவகுமார் காங்கிரஸின் அதிருப்தி உறுப்பினர்கள் தமது முதுகில் குத்தி உள்ளதாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில், “இந்த அதிருப்தி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் விசுவாசிகள் இல்லை.  கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த வெளி மனிதர்கள் ஆவார்கள்.   இவர்களில் பெரும்பாலானோர் எவ்வித கட்சி பின்னணியும் இல்லாத தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆவார்கள்.   இவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு அளித்தது கட்சியின் தவறு” எனப்  பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.