டில்லி

க்களவையில் அமித்ஷா மற்றும் அசாதுதீன் ஓவைசி இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

நேற்று மக்களவையில் தேசிய புலனாய்வுக் குழு சட்ட திருத்தம் குறித்து பாஜக அமைச்சர் சத்யபால் சிங் உரையாற்றினார். அப்போது அவர் முந்திய ஐதராபாத் காவல்துறை ஆணையரை அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி மிரட்டியதாக குறிப்பிட்டார். ஒரு வழக்கின் விசாரணையை தாம் தெரிவித்தபடி மாற்றவில்லை என்றால் ஆணையரை இடமாற்றம் செய்து விடுவதாக அந்த அரசியல்வாதி மிரட்டியதாக சத்யபால் சிங் தெரிவித்தார்.

மேலும் தாம் அப்போது மும்பை காவல்துறை ஆணையராக இருந்ததால் இது குறித்த முழு விவரமும் தமக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாமிய கட்சியான ஐமிம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி அப்போது குறுக்கிட்டார். அவர் சத்யபால் சிங் தாம் கூறியது குறித்த ஆதாரங்களை அவையில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இடையில் குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சரின் பேச்சில் குறுக்கிட்டு உரையை தடை செய்ய முயன்றால் அவர்கள் பேசும் போது ஆளும் கட்சியினர் அதையே செய்வார்கள் என எச்சரித்தார். மேலும் ஓவைசி அமைச்சர் கூறுவதை பொறுமையாக கேட்டு விட்டு விவாதிக்க வேண்டும் எனவும் இடையில் குறுக்கிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

இதற்கு ஓவைசி கோபமடைந்து அமித்ஷா தம்மை நோக்கி விரலை காட்டி பேசுவதால் தாம் பயந்து விடப் போவதில்லை என தெரிவித்தார். அதற்கு அமித்ஷா, “நான் யாரையும் பயமுறுத்த விலை. ஆனால் உங்கள் மனதில் பயம் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என வினவினார்.