Random image

அனைத்து தொகுதிகளிலும் மக்கள் புறக்கணிப்பு: டிடிவியின் அமமுக அதிமுகவுடன் இணையுமா?

சென்னை:

மிழகத்தில் ஆட்சியை பிடிப்போம், எடப்பாடி அரசை கலைப்போம் என்று அதகளம் பண்ணி பணப்பட்டுவாடா அரசியல் நடத்தி வந்த டிடிவிதினகரன், நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தேர்தலிலும் கடுமையான சரிவை சந்தித்துள்ளார். 22 தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக அவரது வலதுகரமாக செயல்பட்ட சென்னை வெற்றிவேல், பலத்த தோல்வியை சந்தித்துள்ளார். இது அமமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக அடியோடு மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக அதிமுகவோடு இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் முயற்சித்து வந்த நிலையில், ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் நடத்தியதால் அதிமுக இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் சசிகலாவும் சிறைக்கு செல்ல டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்ய, எடப்பாடி அவருக்கு எதிராக கொதித்தெழ அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் அடியோடு  நீக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பான சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்  அசத்தலாக வெற்றி பெற்றார். அவரது வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் ரூ.20 டோக்கன் மூலம் அவரது பணப்பட்டுவாடா குட்டு அம்பலமானது.

இதையடுத்து, அதிமுகவில் உள்ள சில எம்எல்ஏக்களை தனது அணிக்கு இழுக்க அவர்கள் பரிதாபமாக பதவி இழந்து இன்று தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் தனது பணபலத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவுடன் எடப்பாடி அரசு மட்டுமில்லாமல், திமுக, பாஜக அனைத்து கட்சியினரையும் சகட்டுமேனிக்கு வசைபாடினார்.

சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது,  அமமுகவை சுயேட்சை எனக்கூறி சின்னம் கொடுக்க மறுக்கின்றனர்  குக்கர் சின்னத்தை தராவிட்டாலும், எந்த சின்னம் கொடுத்தாலும், தமிழக மக்கள் அமமுகவை ஜெயிக்க வைப்பார்கள். சின்னம் முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம் என்றும், தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி  ‘மானங்கெட்ட கூட்டணி’ என்று கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத தமிழக அரசையும், மத்திய  அரசையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள்  நாங்கள்…  என்றும் மார்தட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி என்றும் சசிகலா காலில் விழுந்துதான் முதல்வர் பதவியை பிடித்தார்,  நினைத்திருந்தால் நானே முதல்வர் ஆகியிருப்பேன், 23-ந் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி இருக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

ஆனால், தற்போது வெளியாகி வரும் 22 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அமமுக என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது.  டிடிவி தினகரனின் வாய்ச்சவடால் அவரது அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் அமைந்துள்ளது. அவரது வலது இடது கரங்களாக செயல்பட்டவர்கள், தேர்தலில் அட்ரஸ் இல்லாத அளவுக்கு மக்களால் ஓரங்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மக்களின் இந்தஅதிரடி முடிவு டிடிவி தினகரனையும், அவரது ஆதரவாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது. பலர் மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாமா என்று சிந்திக்க தொடங்கி உள்ளனர். தற்போது 3 அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால், சபாநாயகரின் நடவடிக்கைக்கு உள்ளாகும் சூழ்நிலையில் தற்போதைய இடைத்தேர்தல் முடிவு அவர்களையும் யோசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சிக்கல் காரணமாக அமமுகவுக்கு தாவிய அதிமுக  பிரமுகர்கள் மீண்டும் அதிமுகவுக்கே தாவ முயற்சி செய்யலாம் என்றும், இதைத்தொடர்ந்து அமமுக அதிமுகவோடு இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அமமுகவின் எதிர்காலம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You may have missed