திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் ஆகியோரிடையே கடும்  போட்டி?

தி.மு.க.  பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து அவசர செயற்குழு கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து வரும் 28-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

ஏற்கெனவே செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், பொதுச் செயலாளராக இருக்கும் க.அன்பழகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கட்சியை வழிநடத்துவார் என்றும் இருவேறு யூகங்கள் உலவுகின்றன.

பொதுக்குழு கூடும் அன்று கட்சி பொருளாளர் பதவிக்கான தேர்தலும் நடைபெறும்.

திமுக பொருளாளர் பதவியை ஆற்காடு வீராசாமி வகித்துவந்தார். அதன் பிறகு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது கட்சியின் செயல் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினே வகித்து வருகிறார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உண்டு.

ஆகவே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, புதிதாக பொருளாளரும் அன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்தப்பதவிக்கு கட்சியின் முக்கிய  பிரமுகர்களான துரைமுருகனும் ஆ.ராசாவும் போட்டிபோடுவதாக கூறப்படுகிறது. துரைமுருகன் தற்போது முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.  ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார்.

ஒருவேளை துரைமுருகன் கட்சியின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அவர் தற்போது வகித்து வரும் முதன்மைச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். கடந்த பல வருடங்களாகவே திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கு  ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு ஆசைப்படுவதாகவும், ஆனாலும் ஆ.ராசா மற்றும் துரைமுருகனே போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரே பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் பேசப்படுகிறது.