சென்னை: நாளை முதல் சென்னை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நகரின் பல பகுதிகளில் பொருட்களை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக விலகலை மறந்து குவிந்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 3 வரை 2ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு ஊரகப் பகுதிகளில் சில துறைகளில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தாலும். தமிழக அரசு தளர்வை அறிவிக்கவில்லை.

மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  சில இடங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கியுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை முதல் 29ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நாளை முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் நாளை மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசின் நோக்கத்திற்கு மாறாகவே கள நிலவரங்கள் உள்ளன. நான்கு நாள்கள் கடைகள் இல்லை என்பதால் மொத்த மாநிலம் முழுக்க காலை முதல் சாலைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். அதிலும் சென்னையில் மக்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் கூடினர்.

காய்கறிக்கடை, இறைச்சிக் கடை, பலசரக்குக் கடை, மருந்தகங்கள், பாலகங்கள் ஆகியவற்றில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். பல இடங்களில் தனிமனித இடைவெளி என்பது கடைபிடிக்கப்படாமல் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றனர். அதனால் கடும் போக்குவரத்து நெரிசலுடன் ஊரடங்கு இல்லாத போது சென்னை எப்படி இருக்குமோ அப்படி காட்சியளித்தது.

கோயம்பேடு இப்படி இருக்க… ராயபுரம் பகுதியோ அதற்கும் மேல். சென்னையில் இந்த மண்டலத்தில் தான் கொரோனா நோயாளிகள் அதிகம். மினி ரங்கநாதன் தெரு போன்று மக்கள் கூட்டம் காணப்படுகிறது. தனி மனித இடைவெளி என்பது சிறிதும் இல்லை.

கூட்டம், கூட்டமாக ஏதோ பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவது போல, சர்வ சாதாரணமாக வந்து சென்றனர். கோயம்பேடு, ராயபுரம் இப்படி இருக்க, திருவான்மியூர் பகுதியோ ஏதோ கோயில் திருவிழாவுக்கு வருவது போன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை  பற்றி அக்கறை இன்றி சென்று பொருட்களை வாங்கினர். மக்களின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கைகளை கண்ட மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.