சென்னை

மிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.  வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிப்பது போல் நேற்று முதல் லேசான மழை பெய்து ஆனால் உடனடியாக நின்று விட்டது.  இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அக்டோபர் 19 முதல் 21 ஆம் தேதி வரை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.   அக்டோபர் 18 ஆம் தேதி அன்று ஓரளவு மழையும் வானம் மேகமூட்டத்துடனும் இருக்கும்.  இது 19 முதல் வலுப்பெற்று கனமழையாக மாறும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

தனியார் வானவியல் நிபுணரும் வெதர்மேன் என அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் இன்னும் நான்கு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.