கனமழை: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை:

மிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல மேலும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.


திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதேபோல், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று முதல் சென்னை உள்பட  தமிழகம் முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. இதன் காரணமாக,  திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம், அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 21 சென்டி மீட்டருக்கும் மேல் அதி கன மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டை வெளியிட்டுள்ள வானிலை மையம், அந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரை மிக கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இதேபோல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டை வெளியிட்டு, அந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 7 முதல் 11 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மீனவர்களை பொறுத்த வரையில், இலட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், ஆதலால் மீனவர்கள் இன்று குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கும், நாளை இலட்சத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில், அதிகப்பட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டி மீட்டரும், கடலூர் மாவட்டம் கடலூர், குறிஞ்சிபாடி மற்றும் தூத்துக்குடியில் 17 சென்டிமீட்டரும், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

: