டெக்ஸாஸ், 

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத கடுமையான மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.  சுமார் 350 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் டெக்ஸாஸ் மாநிலம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெக்சாஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் நகர் அருகில் ஹார்வே புயல் காரணமாக கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 27ந்தேதி புயல் 210 கி.மீ.வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது.

இந்த புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணம் கடும் சேதத்துக்கு ஆளானது. இதையடுத்து, டெக்ஸாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புயல் காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால்  பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, ஹூஸ்டன் நகரில் கடுமையான மழை பெய்துவருகிறது. அங்கு, சாலைகளில் இரண்டடுக்கு நீர் தேங்கியுள்ளது. இதுவரை மழை வெள்ளம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து,  மாகாண கவர்னர் அப்பாட் கூறும்போது, “டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்தித்துள்ளது. 1000 தேசிய பாதுகாவலர்கள், பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

இதனால், அங்கு மக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.