சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விட்டுவிட்டு பெய்து வரும் மழை மற்றும் காற்று காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

  ‘வங்கக் கடலில்  உருவாகியுள்ள நிவர் புயல், தற்போது 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.  தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகன்று  வந்துகொண்டிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று முதலே  ல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று  நள்ளிரவு முதல் காலை வரை பெய்த மழையைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், தரமணி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 சென்னையில் முழுவதுவம் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்குன்றம், மாதவரம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி ,நந்தனம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், அனகாபுத்தூர், கோட்டூர்புரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அசோக் நகர், கோடம்பாக்கம் ,குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

 சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

புயல் சின்னத்தால் அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு தாம்பரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னை அசோக் நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக,   மின் தடை ஏற்படலாம். மரங்கள் முறிந்து விழலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.