பெங்களூரு:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்,  கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 2,421 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்கு கனமழை கொட்டி வருகிறது.கர்நாடகத்தின் வட மாவட்டங்களிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.  இதனால் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகத்தில் பெய்து வரும் பேய் மழைக்கு இதுவரை 10 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.கட்டப்பிரபா ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதமாகி உள்ளதாக அம்மாநில விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 91 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

கபினி அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீரும், அதன் அருகே உள்ள தாரகா அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடியும் திறந்து விடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் மொத்தம் 1 லட்சத்து 2,421 கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு இருக்கிறது..

மேட்டூர் அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5,097 கனஅடி நீர் வந்து கொண்டி ருந்தது. அணையின் நீர்மட்டம் 53.98 அடியாக இருந்தது.

கர்நாடகம் காவிரியில் அதிக அளவில் உபரி நீரை திறந்துவிட்டு இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.