மேலும் 2நாட்களுக்கு கனமழை நீடிக்கும்! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகத்தில் மேலும்  2 நாட்களுக்கு கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,  வடகிழக்குப் பருவமழை இயல்பு அளவை விட இந்த ஆண்டு அதிகமாகப் பெய்துள்ளது என்றும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை உள்பட பல மாவட்ங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன்,  தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழையும் 3 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும்,  அடுத்த 24 மணிநேரத்திற்கு ராமநாதபுரம், பெரம்பலூர், கடலூர், அரியலூர். தேனி, கோவை, உதகை, திண்டுக்கல், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, இலங்கை ஆகிய பகுதிகளில் காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபர் 1ல் இருந்து இதுவரை இயல்பு அளவு 36 செ.மீ-ஐ விட அதிகமாக தமிழகத்தில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல, சென்னையில் இயல்பு அளவு 61 செ.மீ-ஐ விட குறைந்து 56 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கார்ட்டூன் கேலரி