மும்பை

சென்ற 46 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மும்பை நகரில் மழை பெய்து வருவதால் நகரம்  முடங்கி உள்ளது

கடந்த 3 நாட்களாக மும்பை நகரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.  இங்கு நேற்று முன் தினம் மணிக்கு 107 கிமீ வேகத்துடன் கூடிய சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.  சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் வெள்ள நீர் தேங்கியது.   சாலை போக்குவரத்து அடியோடு நின்றதால் நகரம் முடங்கிப் போனது

பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பணியில் இறக்கப்பட்டனர்.  நகரில் பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்தனர்.  மேலும் மரங்கள் வேருடன் சாய்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.  நேற்று சற்றே மழை குறைந்த போதிலும் வெள்ளநீர் வடியவில்லை.

மும்பை நகரில் உள்ள கொலாபா பகுதியில் நேற்று முன் தினம் காலை 8.30 மணி முதல் 24 மணி நேரம் விடாமல் மழைபெய்து 331.8 மிமீ மழை பதிவாகி உள்ளது.  இது கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பெய்த மழையை விட அதிகம் ஆகும்.   இந்த மாதம் பெய்ய வேண்டிய மழையில் 64% கடந்த 5 நாட்களில் பெய்துள்ளது.