புதுக்கோட்டை:

ரபிக்கடலில் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அகலும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் மினிக்காய் தீவுகள் அருகே மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறைக்காட்டு வீசும் என்றும், ஆனால் படிப்படியாக இதன் வேகம் குறையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஒருசில நாட்களாக கனத்த மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்து வருகிறது.

கடும் வறட்சி நிலவி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது  பெய்து வரும் திடீர் மழை காரணமாக அந்த பகுதி மக்கள் மற்றும்  விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.