சேலம்: வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட மாணவனின் உடல் சடலமாக மீட்பு
சேலம்:
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 10ம் வகுப்பு மாணவனின் உடல் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டது.
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு வரலாறு காணாத அளவு கனமழை பெய்ததது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வந்ததால், சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் அருகே உள்ள நாராயணநகர் , பச்சைப் பட்டி ,கிச்சிப்பாளையம் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது.

அந்த சமயம் நள்ளிரவு நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய முகமது சாத் என்ற 15 வயது மாணவன், அந்த பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் தவறி விழுந்துள்ளான். தண்ணீர் அதிக அளவு ஓடையில் சென்றதால், அந்த மாணவனை காப்பாற்ற முடியாத உடன் வந்த நண்பர்கள் இது குறித்து உடனடியாக அந்த சிறுவனின் வீட்டிற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட சிறுவனை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டிருந்து. இதற்கிடையில், சேலம் ஆட்சியர் ரோகிணியை முற்றுகையிட்டு ஒரு தரப்பினர் போராட்டம் நடனத்தினர். ஓடைகளை சிலர் ஆக்கிர மித்து கட்டிடங்கள் கட்டி உள்ளதால், 10 அடி அகலம் வரை இருந்த ஓடை தற்போது 5 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து மாணவன் தவறி விழுந்த ஓடையை பார்வையிட்ட கலெக்டர் ரோகிணி, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனை தேடும் பணிக்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் ஷாத்தின் உடல், 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.