21, 22ந்தேதி தமிழகத்தில் பலத்த மழை! மிரட்டும் சென்னை வானிலை மையம்

சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி வருவதால் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ( 21, 22-ந் தேதி)  தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ந்தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில் பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்பட வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ,   தென் மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரத்தையொட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அது தீவிரமாகி வருவதால் வருகிற 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைவதால் வருகிற 21 (திங்கட்கிழமை), 22-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம்- 12 செ.மீ, வேடச்சந்தூர்- 7 செ.மீ. குமாரபாளையம், சத்தியமங்கலம், சங்கரன்கோவில், மேட்டுப்பாளையம் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில்  நேற்று இரவு முழுவதும் இடியுடன் கொட்டிய கனமழையால் உதகையில் இருந்து மஞ்சூர் கின்னகொரை வரை நெடுஞ்சாலையில் 54 இடங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாறைகளை அகற்றி மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் மேட்டுபாளையம் பவானி ஆற்றில் கலப்பதால், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Balachandran, chennai metrological center, heavy rain, Madras Weather Center, tamilnadu
-=-