Random image

சேலத்தில் பயங்கரம்: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10ம் வகுப்பு மாணவன் மரணம்

சேலம்

சேலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன், ஓடையில் தவறி விழுந்து பரிதாபமாக மரணமடைந்தான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசின் அஜாக்கிரதை காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகிள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் சாதாரண மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தென்மாவட்ட கடற்பகுதிகளில் கடற்காற்று வேகமாக வீசி வருவதால், மீனவர்கள்  கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  வெப்பச்சலனம் காரணமாக  சேலத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வந்தால், சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் அருகே உள்ள  நாராயணநகர் , பச்சைப் பட்டி ,கிச்சிப்பாளையம் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் வெள்ள  நீர் கரைபுரண்டு  ஓடியது.

அப்போது, நண்பர்களுடன் திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய முகமது சாத் என்ற 15 வயது சிறுவன், மழைவெள்ளம் பெருக்கெடுத்த ஓடையில் தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனை காப்பாற்ற உடன் வந்த நண்பர்கள் முயற்சித்தும், காப்பாற்ற முடியாததால், அது குறித்து உடனடியாக அந்த சிறுவனின் வீட்டிற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததின் பேரில்  தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விடிய விடிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த சிறுவன் கால்வாயில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளை சரிவர பராமரிக்காத காரணத்தினாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும்,  ஓடைகளை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளதால்,   10 அடி அகலம் வரை இருந்த ஓடை தற்போது 5 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால்தான் மழைநீர் வடிய இடமின்றி  வெள்ளமாக சாலையில் தேங்கி உள்ளதாகவும்,  மாநகராசி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் தற்போது 10ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின் பேரில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஓடை ஆக்கிரமிப்புகள் தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.