சென்னை:

சென்னையில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை… தற்போது மீண்டும் பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று தமிழக கல்வித்துறை அறிவித்து உள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை  நீண்டுள்ளது.  இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தார்.

இந்த நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, முடிச்சூர், அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் கொடுங்கையூர், செங்குன்றம் உள்பட பல பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

சென்னையின் புறநகர் பகுதிகளான  தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், நங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர் பகுதிகளிலும் தொடர் மழை கொட்டி வருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  சில இடங்களில் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில்  அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, பட்டாபிராம், பள்ளிப்பட்டு, திருவள்ளூர், திருத்தணி மற்றும் வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இரவு இடி, மின்னலுடன் விடியவிடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ஆற்காட்டில் 94 மி.மீ. மழை பதிவானது.

மேலும் தமிழகத்தின்  பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையால்  விவசாயிகளும், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.