ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐதராபாத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ஐதராபாத்தில் கனமழை கொட்டி வருகிறது. நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்களும் சரக்கு வேன்களும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக   நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் தொடர் கனமழை காரணமாக குடிநீர் தேக்கம் மற்றும் கால்வாய் மதகுகள் திறந்துவிடப்பட்டதால் நகரின் பல பகுதிகளில் இடுப்பளவு நீர் காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதில் சாலை முழுவதும் வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. ஐதராபாத்தில் மட்டும் 2 செமீ மழை கொட்டியது. இதில் பண்ட்லகுடா, வசந்தாலிபுரம், தம்மைகுடா, முஷீராபாத், டாலி சௌக்கி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படையினர்போராடி மீட்டனர். இதனிடையே பந்தலகுடா பகுதியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 10  பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் கொட்டும் மழையிலும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.