சென்னை: சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து,  புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதுபோல, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மதகு 2-இன் வழியாக கால்வாயில் உபரிநீர் வினாடிக்கு 500 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதல் மழை கொட்டி வருகிறது.  மேலும் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்பட பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.  நேற்று இரவு முதல் பெய்யும் மழை இன்னும்த தொடர்ந்து வருகிறது.  மழை தொடர்வதால் சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அண்ணா சாலையில் உள்ள ஜி.பி.சாலையில், மழைநீர், பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குன்றத்தூர் உள்ளிட்ட தாழ்வான பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று புழல் ஏரிக்கு சுமார் 2000 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரயில் இருந்து மதியம் ஒரு மணி முதல் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்டல் கழனி, சாமியார் மடம் வடகரை பகுதிகளில் தாழ்விடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.