டில்லி,

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு அனுமதி கோரி அமளி செய்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால், அத்துடன் குளிர்கால கூட்டத்தொடரும் ஆரம்பமானது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று சபை கூடியதும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து  இருஅவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

இன்று மக்களவை கூடியதும், காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பசுபாதுகாவலர்களின் தாக்குதல், விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் பிரச்சினை மற்றும் இந்திய-சீன பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோளை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டபடி அமளியில் ஈடுபட்டதால், அவையில் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து, அவையை சுமித்ரா மகாஜன் நண்பகல் வரை ஒத்திவைத்தார். இதனையடுத்து அவை மீண்டும் கூடியதும், இதேநிலை தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் இதேநிலை நீடித்தது. சகாரன்பூர் தலித் மீதான தாக்குதல் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பேச அனுமதி கோரினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாயாவதி ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதனிடையே, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சிகளை பாஜக அரசு முடக்குவதாக அவையில் குற்றஞ்சாட்டினார்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் கொல்லப்படுவதாக குலாம்நபி ஆசாத் கூறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். ராஜ்யசபா தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டபடி, அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், இதேநிலை நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை மீண்டும் நாளை வரை  ஒத்திவைக்கப்பட்டது.