சென்னை:

ர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று மாலை  மெரினா கடற்கரைசாகாமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு தனி அறையில் அனைத்து இயந்திரங்களும் வைக்கப்பட்டன. காவலர்களைத் தவிர வேறு நபர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.  அறை முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு ராணிமேரி கல்லூரி காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரியைச் சுற்றி இரவு பகலாக மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்று வேட்பாளர்கள், முகவர்கள், ஊடகத்தினர் வருவதற்காக தனித்தனியே வழிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

இதற்கிடையே இன்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ஆர்.கே.நகர். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆகியோர் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், “வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெறும். ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வாக்கு எண்ணிக்கை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.