ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், தொடர்வண்டி சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான அதீத குளிர் உணரப்பட்டது.

கடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்  21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேறிகள் இந்த மிகப்பெரிய பனிப்புயலால் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், முதியவர்கள், குழந்தைகள், நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நி்றுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில்  வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று( வெள்ளிக்கிழமை) பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.