இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 300 சுற்றுலா வாகனங்கள் தவிப்பு

சிம்லா: கடும் பனிப்பொழிவால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. டெல்லியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் காணப்பட்டது.

அதேபோன்று, இமாச்சலப்பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக, அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் முழுதும் பனிக்குன்றுகளால் மூடப்பட்டதால் மணாலி – சோலாங்கி இடையே 300க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் போக முடியாமல் சிக்கி உள்ளன. அந்த வாகனங்களில் உள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மணாலி, லாகுல் பிட்டி, கின்னார், சிம்லா,பார்மர் உள்ளிட்ட இடங்களில்  குறிப்பிடத்தக்க அளவிற்கு பனிமழை பெய்துள்ளது. முக்கிய சுற்றுலா தலங்களான மணாலி,டல்ஹவுசி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப நிலையானது பூஜ்யம் டிகிரிக்கும் கீழே பதிவாகி இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு இதே காலநிலை நீடிக்கும் என்று சிம்லா வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அந்த வானிலை மைய அதிகாரி மன்மோகன் சிங் கூறுகையில், சிம்லா, சிர்மர், மண்டி, சம்பா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும்.

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

மீட்பு பணிகள் குறித்து பேசிய சிம்லா துணை ஆணையாளர் அமித் காஷ்யப், தாலி, குர்பி, மாஷ்போரா உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் உள்ள பனிப்படலத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடாபதார், டிக்கார், காட்ரலா, சுங்கிரி, சோப்லா ஆகிய பகுதிகளிலும் படர்ந்துள்ள பனி அகற்றப்பட்டு வருகிறது என்றார்.