பலத்த காற்று: மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை:

ந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து,  மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று தமிழக  மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. வானிலை மையம் தெரிவித்ததை அடுத்து மீன்வளத்துறை உத்தரவு வழங்கியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி களில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்குத் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.