சபரிமலை வரும் குடியரசுத் தலைவருக்காக ஹெலிபேட் அமைக்கப்படுமா?

--

பரிமலை

ரும் 5 ஆம் தேதி அன்று சபரிமலை கோவிலுக்கு வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்காக ஹெலிபேட் அமைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவில் தற்போது மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.  சுமார் மூன்று வாரங்கள் வரை கோவில் நடை திறந்திருப்பது வழக்கமாகும்.   அதாவது வரும் 21 ஆம் தேதி அன்று ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட உள்ளது.  இந்த நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குத் தரிசனத்துக்காக வருவது வழக்கமாகும்.

வரும் 5 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐயப்பனைத் தரிசனம் செய்ய சபரிமலைக்கு வர உள்ளார்.  இது குறித்து கேரள மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அதிகாரிகள் கூட்டம்  ஒன்று நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.  அத்துடன் கொச்சி விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவர் அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை சன்னிதானம் வரை வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக சன்னிதானம் அருகே ஹெலிபேட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன  இவ்வாறு ஹெலிபேட் அமைக்கப்பட்டால்  அங்கிருந்து குடியரசுத் தலைவர் நடந்து சென்று ஐயப்பனை எளிதாகத் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.