Random image

‘ஹெல்மெட் கட்டாயம்’: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:

ரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட்  அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்தகால விசாரணையின்போது,  நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும், அறிவுறுத்தல் களையும்  வழங்கியது. அதற்கு தமிழக அரசும், காவல்துறையும் விளக்கம் அளித்தது. இந்த நிலையில், கடந்த 19ந்தேதி விசாரணையின்போது போலீசார் கூட ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில்   விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து  கூறப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்த இந்த வழக்கில் திபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பிக்கட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இரு சக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,  ஹெல்மெட் அரசாணை மற்றும் அதன்பின்னர் 2015-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23-ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஹெல்மெட் விஷயத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகள் குறித்தும், அரசாணை குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.