சென்னை:

ஹெல்மெட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவரின் தலைக்கா? அல்லது அவரது வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளுக்கா? என காட்டமாக கண்டித்தது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. அதுபோல, மத்திய அரசும் சட்டதிருத்தம் கொண்டுவந்துள்ளது. காவல்துறையினரும்  ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இருந்தாலும்,  பலர் அரசு  உத்தரவை மதிக்காமல் ஹெல்மெட் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பலர் ஹெல்மெட் வைத்திருந்தாலும் அதை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்க் மேல் வைத்துவிட்டு போக்குவரத்து காவலர்களை பார்த்தால் மட்டும் உடனே தலையில் மாட்டிக்கொள்கின்றனர். மேலும் ஊருக்கு வெளியே வந்துவிட்டால், போலீஸ் தொந்தரவு இருக்காது என்பதால் மீண்டும் ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங்குகள் மீது வைத்து விடுகின்றனர்.

இந்த நிலையில் ஹெல்மெட் குறித்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ‘இருசக்கர வாகன ஓட்டிகளை விட பெட்ரோல் டேங்குகள் தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன என்றும், ஹெல்மெட் வாகன ஓட்டிகளின் தலைக்கா அல்லது வாகனத்தின் டேங்குகா என்று கேள்வி எழுப்பியவர்கள், ஹெல்மெட் சோதனையை காவலர்கள்  தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது