குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விரைவில் அமலாகும்?

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்கிற நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கின்றன.  ஆகவே, இருசக்கரத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் நான்கு சக்கரத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்றும் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆனாலும் பலரும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை தவிர்த்தே வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆகஸ்ட் 9ம் தேதி  பாராளுமன்றத்தில்  வாகன சட்ட திருத்த மசோதா தாக்ககல் செய்யப்பட்டது. இதில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்று அங்குள்ள போக்குவரத்து விதிமுறைகள் பற்றி  அறிந்து வந்தார். அமெரிக்கா போல இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார் என்று அப்து தகவல் வெளியானது..

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அவசியம் என்கிற அந்த மசோதாவில்,  இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அவசியம் என்றும், ஆனால் டர்பன் அணியும் சீக்கியர்களுக்கு கட்டாய ஹெல்மெட் அணியும் விதியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இதே போன்று, காரில் பயணம் செய்வோரில் 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் கட்டாய சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற பரிந்துரையும் இந்த சட்ட திருத்தத்தில் இடம்பெற்றுள்ளது.

விதிகளை மீறுவோருக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே ஹெல்மெட் அணிவதாகவும், இதனை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம், இருசக்கரத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசும் முனைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2016ல் தாக்கல் செய்யப்பட்ட “குழந்தைகளுக்கும் ஹெல்மெட்” என்கிற சட்ட மசோதா குறித்து பேச்சு எழுந்துள்ளது. நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது நாடு முழுதும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.