துரா

பாஜகவின் மதுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஹேமமாலினி தனது தொகுதிக்கு தாம் என்ன செய்தோம் என்பது நினைவில்லை என கூறி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியின் தற்போதைய உறுப்பினர் பாஜகவை சேர்ந்த நடிகை ஹேமமாலினி ஆவார். இவருக்கு பாஜக மீண்டும் மதுரா நகரில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.   தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் கனவுக்கன்னி என இந்தி திரைஉலகில் வர்ணிக்கப்பட்டவர். இவர் கணவர் தர்மேந்திரா மற்றும் மகள் இஷா டியோல் ஆகியோரும் நடிப்புத் துறையில் இருந்தவர்கள் ஆவார்கள்.

கடந்த 2004 ஆம் வருடம் பாஜகவில் சேர்ந்த ஹேமமாலினி மாநிலங்களவையில் 2003 முதல்2009 வரை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் இவர் வெற்றி பெற்றார். தாம் ஒரு கிருஷ்ண பக்தை என்பதால் மதுரா தொகுதி மீண்டும் தேவை என கூறி அந்த தொகுதியை மீண்டும் ஹேமமாலினி பெற்றுள்ளார்.

அவர் ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது, “நான் மதுரா தொகுதியில் பல நற்பணிகள் செய்துள்ளேன். நிறைய இடங்களில் சாலை அமைத்துளேன். இதைப் போல் பல பணிகள் செய்துள்ளேன். அவை எல்லாம் எனக்கு தற்போது நினைவில் இல்லை. ஆனால் மக்கள் என்னுடன் உள்ளனர். அதனால் நான் வெற்றி பெறுவேன்” என கூறி உள்ளார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு தனது தொகுதியில் தன்னால் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து கூட தெரியாமல் உள்ளதை பல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.