சென்னை:

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி அரியணையை கைப்பற்றி உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அரசு வரும் 29ந்தேதி பதவி ஏற்க உள்ளது. மாநில முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன்,பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.  பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு 47 இடங்கள் உள்ளதால், அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

மேலும்,  ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜதாந்திரிக்) கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இந்த கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 3 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக ஜேஎம்எம் கட்சிக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன.

அதே வேளையில் தனித்து தேர்தலை சந்திதத பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. இதனால் ஆட்சியை இழந்துள்ளது.

இந்த நிலையில்,  ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி சார்பில் ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.

வரும், 29-ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பதவ ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா, ராகுல் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது  பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் , ஹேமந்த் சோரன் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.