அதிவிரைவு என்ற பெயரில் 48 ரெயில்களில் இனி கூடுதல் கட்டண கொள்ளை!!

டில்லி:

48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை அதிவிரைவு என தரம் உயர்த்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

கடந்த 1ம் தேதி ரெயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டது. இதில் 48 ரெயில்களில் தரம் உயர்த்தியது தெரியவந்தது. இந்த ரெயில்கள் மணிக்கு 50 கி.மீ. தூரம் தற்போது பயணம் செய்து வருகிறது. இதை 5 கி.மீ., கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் இனி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் குறித்த நேரத்திற்கு செல்லுமா? என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. தற்போது குளிர்காலம் என்பதால் வானிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான வடமாநில ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக தான் இயங்கும். இந்த சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரீமியர் சேவை ரெயில்களான ராஜ்தானி, தூரந்தோ, சதாப்தி போன்ற ரெயில்கள் தற்போது தாமதமாக தான் இயக்கப்பட்டு வருகிறது. அதிவிரைவு வண்டிகளாக தரம் உயர்த்தப்பட்ட ரெயில்களில் பயணிகளுக்கு எவ்வித கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. ஆனால், பயணிகள் 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுக்கு ரூ.30ம், 3ம் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ. 45ம், முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.75ம் கூடுதலாக அதிவிரைவு கட்டணமாக பயணிகள் செலுத்த வேண்டும்.

இது போன்ற புதிய கட்டண உயர்வு மூலம் ரூ. 70 கோடி வருவாய் ஈட்ட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாமல் பயணிகள் மீது இதுபோன்ற வழிகளில் சுமை ஏற்றப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 48 ரெயில்களோடு சேர்த்து அதிவிரைவு வண்டிகளின் மொத்த எண்ணிக்கை 1,072 ஆக உயர்ந்துள்ளது. அதிவிரைவு என்ற பெயரில் வசூல் செய்யப்படுவதை கடந்த ஜூலையில் வெளியான இந்திய சிஏஜி அறிக்கையில் கண்டிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘அதிவிரைவு வண்டிகள் அதற்குறிய வேகத்தில் இயக்கப்படுவது கிடையாது. அவ்வாறு குறிப்பிட்ட வேகத்தில் செல்லாத ரெயில்களின் பயணிகளுக்கு அதற்குறிய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால், ரெயில்வே வாரியம் இதற்கு திட்டமிடவில்லை. வடக்கு மத்திய மற்றும் தெற்கு மத்தியத்தில் 2013-2014 முதல் 2015-16ம் ஆண்டு வரை அதிவிரைவு கட்டணம் மட்டும் ரூ.11.17 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் 21 அதிவிரைவு ரெயில்களும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் செல்லவில்லை’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 890 அதிவிரைவு ரெயில்கள் தாமதமாக சென்றிருப்பது ரெயில்வே தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஜூலையில் 129 ரெயில்களும், ஆகஸ்டில் 145 ரெயில்களும், செப்டம்பரில் 183 ரெயில்களும் அதிவிரைவாக இயக்கப்படவில்லை. இதில் 31 ரெயில்கள் ஜூலையில் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக பயணித்துள்ளது. ஆகஸ்டில் 37 ரெயில்கள் இவ்வாறு தாமதமாக சென்றுள்ளது.

அதே ஜூலை மாதத்தில் 196 ரெயில்களும், ஆகஸ்டில் 186 ரெயில்களும், செப்டம்பரில் 240 ரெயில்களும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தாமதமாக பயணித்துள்ளது. குறித்த நேரத்தில் சென்று வரும் ரெயில்களின் சராசரி அளவு 73 சதவீதம் என்ற நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.

திருச்சி-சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், புனே-அமராவதி ஏசி எக்ஸ்பிரஸ், பாடலிபுத்திரா-சண்டிகர் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டிணம்-நந்தத் எக்ஸபிரஸ், டில்லி-பதான்கோட் எக்ஸ்பிரஸ், கான்பூர்-உதம்பூர் எக்ஸ்பிரஸ், சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ், பெங்களூரு- சிவ்மோகா எக்ஸ்பிரஸ், டாடா-விசாகப்பட்டிணம் எக்ஸ்பிரஸ், தார்பங்கா-ஜலந்தர் எக்ஸ்பிரஸ், மும்பை-மதுரா எக்ஸ்பிரஸ், மும்பை-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவிரைவு ரெயில்களாக மாற்றப்படுவதில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

மேலும், தற்போது பரவலாக ரெயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ரெயில்களை அதிவேகத்துடன் இயக்க பாதுகாப்பு இயக்குனரகம் அனுமதிக்காத நிலை உள்ளது.