டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சான்றே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரம், வயநாடு எம்.பி.யுமான  ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.  இன்று நாடு முழுவதும் பந்த் அறிவித்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளது. தமிழகத்திலும் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், விவசாய சட்ட மசோதா குறித்து, ராகுல்காந்தி காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை. அவர்களின் குரல் பாராளுமன்றத்திலும் வெளியிலும் நசுக்கப்படுகிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சான்று இங்கே,  வேளாண் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது  என தெரிவித்து, அதனுடன், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குரல் தொடர்பான செய்திகளையும் பதிவிட்டுள்ளார்.