கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமிக்கு சைக்கிளை பரிசாக அளித்த ஹீரோ சைக்கிள்ஸ்

தான் சேமித்து வைத்த தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கிய தமிழகச் சிறுமிக்கு சைக்கிளை பரிசாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது. அந்த சிறுமிக்கு ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிளை பரிசாக வழங்குவதாக் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

50 ஆண்டுகள் காணாத வகையில் கேரளாவில் கனமழை பொழிந்தது. வெள்ளநீர் 13 மாவட்டங்களை சூழ்ந்த நிலையில் லட்சக்கணகான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் கனமழை மற்றும் நிலச்சரியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரள மக்களுக்காக அனைவரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

horo-cycles

மத்திய அரசு, மாநில அரசுகள், பிரபலங்கள், பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும், உணவுப்பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்த 8 வயதை சேர்ந்த அனுப்பிரியா தான் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அக்டோபர் 16ம் தேதி தனது பிறந்த நாள் வர உள்ள நிலையில் புது சைக்கிள் வாங்குவதற்காக அந்த பணத்தை சேமித்து வைத்திருந்ததாக அனுப்பிரியா தெரிவித்துள்ளார்.

தான் ஆசையாக சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு வழங்கிய அனுப்பிரியாவின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. இது பற்றி அறிந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அனுப்பிரியாவிற்கு புதிய சைக்கிள் ஒன்றை வழங்கி உள்ளது. மேலும், ஆண்டு தோறும் அனுப்பிரியாவிற்கு ஒரு புதிய சைக்கிள் பரிசாக அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முன்ஜல் தெரிவித்துள்ளார்.

மேலும், அனுப்பிரியாவிற்கு ரூ.9000 பணத்தையும் ஹீரோ சைக்கிள் நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆனால், அதனை வாங்க சிறுமியும், அவரது குடும்பத்தினரும் மறுத்து விட்டனர்.