காரை தொடர்ந்து வீடு: முதுகை படிக்கட்டாக்கி உதவிய மீனவருக்கு குவியும் பரிசுகள்

கொச்சி:

கேரள வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற களமிறிங்கிய கேரளாவை சேர்ந்த மீனவரான ஜெய்சால்,  தன் முதுகை படிக்கட்டாக்கி பொதுமக்கள் படகில் ஏற உதவி செய்தார்.

அவரது சேவை சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து மஹிந்திரா கார் நிறுவனம், அவருக்கு புதிய ரக  ‘மராஸ்ஸோ’ ரக காரை பரிசளித்து கவுரவப்படுத்தியது. இந்த நிலையில், தற்போது அவருக்கு  வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஜெய்சால் (கேரள மீனவர்)

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32) என்ற மீனவர், கேரள வெள்ளத்தின் போது கடற்படை வீரர்களுக்கு இணையாக மீட்புப்பணியில் ஈடுபட்டார். மீட்புப்பணியின்போது, ஜெய்ஷால் தன் முதுகைப் படிக்கட்டாக்கிக்கொள்ள, பெண்கள், முதியோர்கள் அவரின்மீது கால் வைத்து படகில் ஏறினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியது. மீனவர் ஜெய்சாலின் உதவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இந்த நிலையில்  கேரளாவில் உள்ள முஸ்லிம் அமைப்பான,சன்னி யுவஜன சங்கம் (Sunni Yuvajana Sangam)  ஜெய்ஷாலுக்கு வீடு ஒன்றைப் பரிசாக வழங்குவதாக அறிவித்து உள்ளது.

நேற்று ஜெய்ஷாலுக்காக கட்டப்பட உள்ள வீட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.  இந்த வீடு விரைவில் கட்டப்பபட்டு ஜெய்சாலிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சால்,  ‘இப்படி எல்லாம் நடக்கும் என்று சற்றும் நினைக்க வில்லை. என் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டால்கூட என்னால் ஒரு வீட்டை வாங்க முடியாது என்று உருக்கமான கூறினார்.

மேலும், கார் வாங்க வேண்டும் என்ற எனது தற்போது நிறைவேறி உள்ளதாகவும், தனது ஒவ்வொரு ஆசைகளும் நிறைவேறிவருவதை என்னால் நம்ப முடியவில்லை” என்றும்  கேரளா வில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வர தனக்கு அழைப்பு வருவதாகவும் ஜெய்ஷால்  கூறினார்.

ஜெய்சாலுக்கு,  மலையாளப் பட இயக்குநர் வினயன் ரூ.1 லட்சமும்,  துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒரு லட்சமும் வழங்கியுள்ளனர். மேலும் பலர் அவருக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கேரள வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜெய்ஷாலை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.