போபால்: கதாநாயகி என்றால் மும்பையில் தங்கி நடனமாட வேண்டும், கல்வி நிலையமான ஜேஎன்யூக்கு எதற்கு தீபிகா படுகோனே செல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா விமர்சித்துள்ளார்.

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம், அதுதொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை. டாப்சி, ஹூமா குரோசி, சுவரா பாஸ்கர், தியா மிர்சா, சோனம் கபூர், அலியா பட், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.

உச்சபட்சமாக, தீபிகா படுகோனே ஜேஎன்யூ பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

தீபிகா படுகோனே துணிச்சல் பலராலும் பலத்த பாராட்டுகளை பெற்றது. அவரது சப்பாக் படத்தின் விளம்பரத்துக்காக அவர் இப்படி செய்வதாக விமர்சனங்களும் எழுந்தன.

இந் நிலையில், கதாநாயகி என்றால் மும்பையில் தங்கி நடனமாட வேண்டும், கல்வி நிலையமான ஜேஎன்யூக்கு எதற்கு செல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் கோபால் பார்கவா விமர்சித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: ஒரு கதாநாயகி என்பவர் மும்பையில் தங்கி நடனமாட வேண்டும், அவருக்கு ஜேஎன்யூ செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இதுபோன்ற டஜன்கணக்கானவர்களை ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். உண்மையில் படிப்பதற்காக மட்டுமே இருக்கும் இடங்களில் அரசியல் செய்கிறார்கள். கல்வி நிலைய வளாகங்கள் படிப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும், அரசியலுக்காக அல்ல என்று விமர்சித்துள்ளார்.

பார்கவாவின் கருத்துக்கு எதிராக சில விமர்சனங்களை முன் வைக்கிறார் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் நரேந்திர சலுஜா. அவர் கூறி இருப்பதாவது: இதே கருத்தை பாஜக அரசியல்வாதிகளான ஹேமா மாலினி, அவரது மகள் கிரன் கோர், ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு பொருந்தும் என்று அவர் சொல்வாரா?

குறிப்பாக கடந்த காலங்களில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது ஹேமாமாலினியும், அவரது மகளும் பல நிகழ்ச்சிகளில் ஆடினார்களே என்று பதிலடியாக கூறியிருக்கிறார்.