கவுகாத்தி: மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்திலும், மணிப்பூரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நாகாகலாந்தைச் சேர்ந்த தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பு, பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் கோரிக்கை என்பது நாகாலர்ந்து மக்களுக்கு என்று ஒரு தனி நாடும், அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்பது தான்.

பிரதமராக மோடி முதன் முறையாக பொறுப்பேற்ற பின்னர், போராட்டத்தில் குதித்து வரும் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக தனி நாடு என்ற கோரிக்கை கைவிடப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, 370வது பிரிவு ஜம்முகாஷ்மீரில் ரத்து செய்யப்பட்டது.

அதனால், நாகாலாந்துக்கு தனி நாடு என்ற அந்தஸ்தும், தனிகொடியும் கிடைத்து விடும் என்ற செய்திகள் பரவலாக பரவின. இந்த விவகாரத்தில், இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன.

ஆனால், பேச்சுவார்த்தை மற்றும் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு முன்பே, அதிருப்தி குழுக்கள் மூலம் இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, நாகாலாந்து டிஜிபி ஜான் லாங்குமேர் கூறியதாவது: 60 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வது மிகவும் கடினம்.

இந்த பேச்சுவார்த்தை மற்றும் அதில் எட்டப்போகும் முடிவால் சில குழுக்கள் அதிருப்தியில் இருப்பதாக அறிகிறோம். எனவே, ராணுவ வீரர்களை தயார்நிலையில் வைத்திருக்கிறோம். 2 மாதங்கள் வரை அவர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் இருப்பர்.

தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் பொதுச்செயலாளர் முய்வா கூறியிருப்பதாவது: நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அதிக இருப்பு வைத்து கொள்ள மாநில நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கேற்ப சமாளிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

அதே நேரத்தில் வன்முறை, கலவர சம்பவங்கள் ஏதேனும் நிகழக்கூடும் என்பதால், விடுமுறையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணியில் உடனடியாக சேர உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நாகாலாந்து கவர்னர் ரவி, முக்கிய குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த விவகாரத்தில், இறுதி முடிவை வரும் 31ம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.