உயர்நீதிமன்றம் அறிவுரை – அரசு எச்சரிக்கை எதிரொலி: பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள்!

சென்னை:

மிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆசிரியர்களுக்கு எழுப்பிய கேள்விகள் மற்றும் அறிவுரையை தொடர்ந்தும், அரசின் எச்சரிக்கை காரணமாகவும்  இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று 96 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்திருப்பதாக  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறி உள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த 22ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு எச்சரித்து  இன்று காலை வரை கெடு விதித்தது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில்,  சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.   அரசின் நிதி நிலைமை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கைவிரித்து விட்ட நீதி மன்றம்,  சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல.  மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? என அதிருப்தி தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பெரும்பலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் கோரிக்கையை ஏற்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சியிலும் 100 சதவிகித அளவில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 99 புள்ளி 9 சதவீத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 3 ஆசிரியர்கள் வரவில்லை என்றும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதுபோல  சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்  என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாகவும் 96 சதவிகித ஆசிரியர்கள் இன்று பணிக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் இன்று பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்படினத்தில் காலையிலிருந்து பணிக்கு திரும்பாத 29 ஆசிரியர்கள்  அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் 70 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் செயல்படுவதாகவும்,  15 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அறிவித்து உள்ளார்.

திருருநெல்வேலி மாவட்டத்தில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் இதுவரை 2,577 பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர் .99% ஆசிரியர் பணிக்கு திரும்பி உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அவசியமில்லை என்று  திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  கூறி உள்ளார்.

கோவை மாவட்டத்தில் 97சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.