சென்னை

சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி 1993ல் தன் மகன் இறப்புக்கு நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை 24 ஆண்டுகள் முடிக்காமல் இருந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

லோகேஸ்வரன் என்பவர் சென்னையை சேர்ந்த லாரி ஓட்டுனர்.  இவர் கடந்த 1993ஆம் வருடம் லாரியை செலுத்தும் போது அரசு போக்குவரத்து பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.   இவர் இறப்புக்கு இழப்புக் கோரி லோகேஸ்வரனின் தாயார் பாக்கியம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அவர் மகன் ஒரு லாரி கம்பெனி முதலாளியிடம் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்ததால் அவர் பணிபுரிவோர் வேலை நேரத்தில் இறந்ததற்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.    சட்டப்படி தொழிற்சாலைகளில் பணி புரியும்போது மரணம் ஏற்பட்டால் மட்டுமே இந்தப் பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும் என்னும் காரணத்தை காட்டி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதன் பின் அவர் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கை அவர் பணி புரிந்த லாரி நிறுவனம் வாதிட்டதின் பேரில் நஷ்ட ஈடு காப்பீடு செய்யப்பட்டிருப்பதால் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காப்பீடு நிறுவனம் தனது முறையீட்டில், இந்த நஷ்ட ஈடு, லாரி உரிமையாளர் மற்றும் அரசுப் பேருந்து நிறுவனம் ஆகிய இருவர் மட்டுமே பகிர்ந்து பாக்கியத்துக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற தீர்ப்பாயம், இந்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.3.47 லட்சம் இழப்பீடு வழந்த வேண்டும் என காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.   மேலும் இந்த வழக்கு 24 ஆண்டுகள் இழுக்கடிக்கப் பட்டதற்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.