நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு பென்ஷன் மறுப்பது நியாயமற்றது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விலன்கட்டூரைச் சேர்ந்தவர் கலியன் (100). சுதந்திர போராட்ட தியாகி. இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டு 1943 மார்ச் முதல் 1944 மார்ச் வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக அரசின் தியாகி பென்ஷன் பெற்று வருகிறார். இதனால் தனக்கு மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் கோரி விண்ணப்பித்தார். தன்னுடன் சிறையில் இருந்த தியாகிகள் காளிமுத்தன், சாமி ஆகியோரின் சான்றிதழையும் இணைத்திருந்தார்.

மத்திய அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2014ல் சிவகங்கை கலெக்டரிடம் மீண்டும் மனு அளித்தார். சிறையில் இருந்ததற்கு ஆதாரமாக, முதன்மையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை எனக்கூறி 2018ல் மத்திய அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து தியாகி கலியன், ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனு செய்திருந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசின் உள்துறை செயலர் (தியாகிகள் பிரிவு) தரப்பில் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் 100 வயதை அடைந்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளார். இவரைப் போன்றவர்களின் தியாகத்தால் தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. இதற்காக பாடுபட்டவர்களுக்கு விடுதலை கிடைத்த பிறகு பென்ஷன் மறுப்பது ஏற்புடையதல்ல. மாநில அரசு பென்ஷன் வழங்கும்போது மத்திய அரசு மறுக்கிறது. உடன் சிறையில் இருந்தவர்களின் சான்றை அளித்துள்ளார். அதுவே போதுமானது. வழங்க முடியாது என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.  எனவே, மத்திய அரசின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கலியனுக்கு, 2014ல் இருந்து கணக்கிட்டு, மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.