சென்னை:

நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகள் திறப்பது குறித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு செய்திருந்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் அரசு கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு தவறான தகவலை உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்துள்ள மிகத்தவறு என்று என்று அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

ஏற்கனவே,  தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று மார்ச் 30ந்தேதி உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில்  2,800 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், சண்டீகர் அரசு தனது எல்லைக்குள் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளைத் திறந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றியது சரியானது என தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றாவிட்டாலும் மதுக்கடைகளை திறக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின்  இந்த உத்தரவு தமிழகத்திற்கு பொருந்துமா எனக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்து.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்  முகுல் ரோத்தகி ஆஜராகி, “நகராட்சிப் பகுதிகள் மட்டும்தான் சண்டீகரில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது’ என்று வாதிட்டார்.

இதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏன் கவலைப்பட வேண்டும்? எங்களது உத்தரவு சண்டீகரின் நகராட்சிப் பகுதிக்கும் பொருந்தும் என்றால், அது நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் அந்த உத்தரவு பொருந்தும்’ என்றார்.

ஆனால், அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி டி.ஓய். சந்திரசூட், “உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் இடம் பெற்றுள்ள “பிற நகராட்சிப் பகுதிகள்’ என்ற சொற்றொடருக்கான விளக்கம், நாட்டிலுள்ள பிற நகராட்சிப் பகுதிகள் என்பதாகும்’ என்றார்.

இந்நிலையில்,  இதே விவகாரம் தொடர்பாக சென்னை  உயர் நீதிமன்றத்தில் பாமக  வழக்கறிஞர் பாலு தொடர்ந்திருந்த வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவல் குறித்து, கருத்து  தெரிவித்த தலைமை நீதிபதி, ‘நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்து விட்டு, அதில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது என்று கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்’ என்று அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இது ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.