சென்னை: சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டுமென ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைபட்டுள்ள நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2018ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவோரை விடுதலை செய்யலாம் என்று தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தும், அந்த பரிந்துரையின் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு மீது தமிழக அரசு வாதாடுகையில், “தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காத வரை சட்ட விரோத காவல் என்று கூற முடியாது. ஆளுநரின் அதிகாரத்தை கேள்வியெழுப்ப முடியாது. நளினி சட்ட விரோத காவலில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை முடித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினியின் விடுதலை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.