அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அன்பழகன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் வேலுமணி மீது அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை அன்பழகன் என்பவர் தாக்கல் செய்தார். அதில், ‘நான் கொடுத்த புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “மனுதாரர் உண்மைகளை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். அந்த விசாரணையிலும் மனுதாரரும் கலந்து கொண்டார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதையெல்லாம் மனுவில் சொல்லாமல், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அமைச்சருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் சட்டப்படி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் எந்த விதிமீறலும் இல்லை” என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.