வாட்ஸ் ஆப் மூலம் தாக்கலான வேட்பு மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா:

மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9 வேட்பாளர்கள் வாட்ஸ் ஆப் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வேட்பாளர் நேரடியாக மனு தாக்கல் செய்யாததால் மனுக்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது.

சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கூறுகையில், ‘‘நாங்கள் நேரடியாக சென்று மனுதாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்தில் காத்திருந்தோம். ஆனால் எதிர்தரப்பு கோஷ்டியினர் எங்களை மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். மனுக்களை கிழித்து எறிந்ததுடன், எங்களையும் தாக்கினர். அதனாலேயே வாட்ஸ் ஆப் மூலம் மனு தாக்கல் செய்தோம்’’ என்று தெரிவித்தனர்.

இதனை ஏற்ற நீதிபதிகள், ‘‘வாட்ஸ்ஆப் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 9 வேட்பாளர்களின் மனுக்களும் செல்லும். அதனால் மனுக்களை மாநில தேர்தல் கமிஷனை ஏற்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.