சென்னை: தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணய விஷயத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் போன்ற சட்டரீதியான அமைப்புகள் ஆகியவை மறுஆய்வில் ஈடுபட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது, மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் மற்றும் இதர தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச தகுதி வயது 17 என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வயதுவரம்பு விஷயத்தில் அரசுகள் உள்ளிட்ட இதர சட்டப்பூர்வ அமைப்புகள் விரைந்து மறுஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்றம் மேலும் கூறியுள்ளதாவது, “கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. படிப்பில் புத்திசாலியாக இருக்கும் மாணாக்கர்கள் கடினமான நுழைவுத்தேர்வுகளை இளம் வயதிலேயே எழுதி தேர்ச்சிப்பெற்று விடுகின்றனர். எனவே, அதுபோன்ற மாணாக்கர்களின் கல்வியானது வெறும் வயதைக் காட்டி தடைபடலாகாது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாக குறைந்தபட்ச வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, அதற்கேற்ப வயதுவரம்பு விஷயத்திலும் மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது” என்றுள்ளது நீதிமன்றம்.