கீழடி : அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை மத்திய அரசிடம் அளிக்க ஐகோர்ட் தடை

துரை

கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு தரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய தமிழ் நாகரீகம் இருந்துள்ளதாக காப்பியங்கள் தெரிவிக்கின்ற்ன. இதை ஒட்டி அகழ்வாராய்ச்சி நடந்தது. மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் அடிக்கடி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நடந்துள்ள அகழ்வாராய்ச்சியின் 4 ஆம் கட்ட ஆய்வில் தங்க நகைகள் உள்ளிட்ட 7000 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒரிசாவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் அகழ்வாராய்ச்சி அறிக்கையை அவருக்கு பதிலாக பெங்களூருவை சேர்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர் அளிப்பார் என அரசு அறிவித்தது. இதை எதிர்த்தும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் அளிக்கக் கூடாது எனவும் மதுரையை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காளிப்பாளரிடம் தரத் தேவை இல்லை எனவும், கட்டாயம் வழங்க வேண்டும் எனில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் முன்னிலையில் வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வு அறிக்கையை அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.