ஹெல்மெட் விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை:

ரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல்  அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றது குறித்து, சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி  தொடர்ந்த வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுஉள்ளது.

வழக்கு குறித்து டிச. 17க்குள் பதில் தர வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற மருத்துவ முகாமையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு பேருடன் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  மற்றொருவரின் வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்து பேரணியில் பங்கு கொண்டார்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்யக்கோரி டிராபிக் ராமசாமி இலுப்பூர் காவல்நிலையில் புகார் அளித்தார். அங்கு புகார் பதியப்படாத நிலையில், உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வழக்கு குறித்து சுகாதாரத் துறை அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதி மன்றம், இதுகுறித்து டிசம்பர் 17க்குள் பதில் அளிக்க கூறி வழக்கை ஒத்தி வைத்தது.