சென்னை:
ஜூன் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு கால அட்டவணை வெளியிட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு சரமாரியாக கேள்விகளை முன் வைத்தனர். அதாவது, 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்? பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீரர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பொது மடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கில் டாஸ்மாக்கை திறப்பதுபோல் அல்ல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. டாஸ்மாக் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை. ஜூன் 15-ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம். ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.