நடிகர் சிம்புவுக்கு சொந்தமான உடைமைகளை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சிம்பு திரைப்படத்தில் நடிப்பதற்காக பெற்ற ஐம்பது லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்தாவிட்டால் அவரது கார் உள்ளிட்ட உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

simbu

கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் பேஷன் (Passion) மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு, ரூ.50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது.

ஆனால் படத்தில் சிம்பு நடிக்காத காரணத்தால் அவர் பெற்ற முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்தை சிம்பு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேற்கண்ட தொகையை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என சிம்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதி, அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்குள் சிம்பு பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவருக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கார்ட்டூன் கேலரி