சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையில், தங்களைப் பணயம் வைத்து செயல்பட்டுவரும் மருத்துவர்கள், சுகாதார & தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு ஊதிய உயர்வு வழங்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்; அரசு தரப்பில் 37 ஆயிரம் தனிப் பாதுகாப்பு சாதனங்கள், 1.17 லட்சம் ‘என் 95’ முக கவசங்கள், 7.75 லட்சம் மூன்றடுக்கு முக கவசங்கள் இருப்பதாகவும், 14 ஆயிரம் பரிசோதனை சாதனங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த சாதனங்கள், அரசுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களான டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களின் சேவை தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்பட்டது.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். இவர்களின் உடல்நிலை குறித்து இந்த நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. இவர்களுக்குப் போதிய அளவில் பணி இடைவெளி வழங்கப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பில் இருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டும்; அதற்காக, தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.

மனித குலத்தையே அச்சுறுத்தும் இந்த நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், காவல்துறையினரின் பணிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இவர்களின் பணியை பாராட்டும் விதமாக, முறையான சம்பள உயர்வை அரசு வழங்கும் என நம்புகிறோம் மற்றும் எதிர்பார்க்கிறோம்.

இவர்களின் பணிக்கு இணையான சம்பளம் இல்லை. சமூகம் ஆரோக்கியமாக இருக்கவும் அமைதியாக இருக்கவும் இவர்களின் சேவை அவசியம் என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.